$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

ஒரு கவிதைதான்....

பயணி

மொழியாக்கக் கவிதைகள் பல தமிழில் வெளியாகின்றன. நல்லதொரு மொழியாக்கம் மூலப்படைப்பிற்கு நேர்மையானதாய், தமிழ் மொழி மரபிற்கு இயைபுற, செறிவான சொற்களுடன் கவித்துவம் பொருந்தியதாய் விளங்கும்.
மொழியாக்கம் மமறுபடைப்பேடு என்பதனால், அதன் வெற்றி , மொழியாக்கம் செய்பவரின் - உணர்திறனிலும் வெளிப்பாட்டுத்திறனிலும் வடிவச் செம்மை உணர்விலும் தங்கியிருக்கிறது.
குறித்ததொரு படைப்பினை வெவ்வேறு நபர்கள் மொழியாக்கம் செய்யும்போது, அவர்களின் 'தனியாள் இயல்பு வேறுபாடுகள்' காரணமாய் மொழியாக்கங்களில் 'வித்தியாசங்கள்'அமைந்திருப்பதைக் காணமுடிகிறது; இவற்றை நோக்குவதும் சுவாரசியமானதுதான்.

உதாரணத்திற்கு ஒன்று:

ஆங்கிலக் கவிஞன் மவில்லியம் பிளேக்டு எழுதிய 'A Poison Tree' என்ற கவிதையின் நான்கு மொழியாக்கங்கள் காணக்கிடைக்கின்றன ; முறையே முருகையன், சி.சு.செல்லப்பா, வை.சுந்தரேசன், க.சத்தியதாசன் ஆகியோர் அவற்றைச் செய்துள்ளனர்.

1. கவிதைத் தலைப்பை 'விஷ­மரம்' என்று செல்லப்பா மொழியாக்கம் செய்ய, ஏனைய மூவரும் 'நச்சுமரம்' என்று தந்துள்ளனர்.

2. மூலக்கவிதை 16 வரிகளில் அமைந்துள்ளது. முருகையனும் செல்லப்பாவும் 16 வரிகளில் மொழியாக்கம் செய்துள்ளனர்; சுந்தரேசன் 19 வரிகளிலும், சத்தியதாசன் 21 வரிகளிலும் செய்துள்ளனர்.

3. மூலக்கவிதையின் முதல் நான்கு வரிகள் வருமாறு:
I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe:
I told it not, my wrath did grow.

மொழியாக்கங்கள்:

கோபம் கொண்டேன் தோழன் மீதில்;
கோபம் சொன்னேன்; குளிர்ந்து தீர்ந்தது;
கோபம் கொண்டேன் தீய பகைவனில்;
கூறினேன் அல்லேன்; வளர்ந்தது கோபம்.
(முருகையன்)

நண்பனிடம் கோபம் கொண்டு இருந்தேன்
கோபத்தை காட்டினேன் கோபம் தணிந்தது
பகைவனிடம் கோபம் கொண்டு இருந்தேன்
அதைக் காட்டவில்லை, என் கோபம் வளர்ந்தது
(செல்லப்பா)

என் நண்பனுடன் கோபம் உற்றேன்
என் சினத்தை அவனிடம் பகன்றேன்
சினம் தணிந்தது
என் பகைவனுடன் கோபம் உற்றேன்
என் சினத்தை மறைத்தேன்
சினம் வளர்ந்தது.
(சுந்தரேசன்)

நான் எனது நண்பனுடன் கோபம் கொண்டிருந்தேன்
அதை வெளிக்காட்டினேன் அது முடிவுக்கு வந்தது.
நான் எதிரியுடன் கொண்டிருந்த கோபத்தை
மறைத்து வைத்தேன் அது வளர்ந்தது.
(சத்தியதாசன்)

அ) மூலத்திலுள்ளதை நேரே மொழியாக்கம் செய்ததால் - என், நான், எனது ஆகிய சொற்கள் மூன்றாம் நான்காம் உதாரணங்களில் கையாளப்பட்டுள்ளன ; ஆனால், தமிழ் மொழிமரபிற்கு இவை தேவையில்லை. முதல் இரண்டு உதாரணங்களிலும் இவை இல்லாமலேயே மூலத்தின் அர்த்தம் வெளிப்படுத்தப்படுகின்றது. “கோபம் கொண்டேன் தீய பகைவனில்“என்பதில் முறையே, நான்/ என்/ எனது என்பன மறைந்துள்ளன; இந்த விடுபாடு மொழியாக்கத்திற்குச் செறிவையும் தருகிறது.

ஆ) “கோபம் கொண்டேன்“ / “கோபம் சொன்னேன்“ என முருகையன் எளிமையாக வெளிப்படுத்துகிறார்; “கோபம் உற்றேன்“ / “பகன்றேன்“ எனச் சுந்தரேசனின் சொற்பிரயோகம் சிறிது கடினத்தன்மையைக் கொண்டதாயுள்ளது.

இ) கோபம் கொண்டேன் / கோபம் கொண்டு இருந்தேன் / கோபம்கொண்டிருந்தேன்;

கோபத்தைக் காட்டினேன் / அதை வெளிக்காட்டினேன்;

கூறினேன் அல்லேன் / அதைக் காட்டவில்லை / சினத்தை மறைத்தேன் / மறைத்து வைத்தேன்.

என, ஒரே பொருள் வேறுவேறு சொற்களில் வேறுவேறு கவிஞரால் வெளிப்படுத்தப்பட்டுள் ளது.

ஈ) முருகையனின் மொழியாக்கம் செறிவையும் கவிதைக்குரிய “இயங்குதன்மை“ யையும் கொண்டுள்ளது; ஏனைய மூன்று மொழியாக்கங்களும் கட்டுரையின் “உலர்ந்த“ - விவரணத்தன்மையுடன், செறிவற்றும் காணப்படுகின்றன.

4. மூலக்கவிதையின் கடைசி இரண்டு வரிகள் வருமாறு:

In the morning glad I see
My foe outstretch’d beneath the tree.

இவ்வரிகளின் மொழியாக்கங்கள் வருமாறு:

மரத்தின் கீழே காலையிற் கிடந்த
மாற்றான் உடலை மகிழ்வுடன் கண்டேன்
(முருகையன்)


காலையில் மகிழ்வுடன் பார்த்தேன் நான்
மரத்தடியில் பகைவன் விரைத்துக் கிடப்பதை.
(செல்லப்பா)


காலையில் மரத்தின் கீழ்
என் பகைவன் மல்லாந்து கிடத்தல் கண்டு
மகிழ்வுற்றேன்.
(சுந்தரேசன்)


காலையில் நான் கண்டு மகிழ்ந்தேன்
அம் மரத்தின் கீழ் இறந்து கிடந்த
என் எதிரியை
(சத்தியதாசன்)


அ) க்ஷூலிe என்ற சொல்லிற்கு மாற்றான்/ பகைவன் (இருவரால்) / எதிரி ஆகிய சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

ஆ) கிடந்த மாற்றான் உடலை / விரைத்துக் கிடப்பதை / மல்லாந்து கிடத்தல் கண்டு / இறந்து கிடந்த ஆகிய பிரயோகங்களிலும் வேறுபாடுகளைக் காணலாம்.

இ) முருகையனின் மொழியாக்க வரிகள் தவிர்ந்த ஏனைய மூன்றும் வெறும் வசனக் கூற்றுகளாக உள்ளன. அவரது மொழியாக்கம் யாப்பில் எதுகை, மோனை பேணி ஓசையுடன் மரபுமுறைக் கவிதையாக உள்ளது; ஏனைய மூன்றும் புதுக்கவிதைப் பாணியிலுள்ளன.

இவ்வாறாக, தனியாள் இயல்பு காரணமாய் வெளிப்படும் வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது. கவிதையை முழுமையாய்ப் பார்க்கையில் - முருகையனின் மொழியாக்கம் கவித்துவ வீச்சுடன், செறிவானதாய் என் வாசக மனதில் பதிகின்றதெனவும் சொல்ல இயலும்!
ஒரு கவிதைதான்.... ஒரு கவிதைதான்.... Reviewed by மறுபாதி on 9:26 AM Rating: 5

No comments:

Powered by Blogger.