மருதம் கேதீஸ்
இறுதி உச்சக் கணங்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன்
தொனித்த வேடப் பிரபுக்களின் விரல் மொழிகளில்
நான் பெரும் மதிப்புக்குரியவனாக உணர்ந்தபோது
வார்த்தைகள் அம்மணமாக என்னை விட்டுச் சென்றன
கண்ணாடிக்குவளைக்குள் ஊறும் குமிழிகளில்
நாக்கினாலும் உதடுகளாலும்
பேசமுடியாச் சித்திரங்களை வரையத் தொடங்கினேன்
நான் வரைந்த சித்திரங்கள் என்னைத் தின்னத்தொடங்கியபோது
வெள்ளி நுரைகளாலான
முதல்தரக் கவிதைகளை கக்கிக்கொண்டிருந்தேன்
அவையின் அர்த்தங்கள் காகிதங்களில் குமிழியிட்டழிந்தன
தனக்கென ஒரு மொழியைக் கொண்டிராத உலகம்
பலகோடி வசைச் சொற்களோடு என்னைத் தழுவியபோது
ஊமையனாய்
செவிடனாய்
உணர்வில்லாதவனாய்
மலையளவு புழுதியைத் தின்றோ கடந்தோ
நெடுந்தூக்கத்திற்குச் சென்றுவிட்டேன்
மற்றொரு நாள்
எல்லாவற்றிலும் புலன்கள் நடுக்குற்று அலறுகின்றன
ஊனப்பட்டுத் தொங்கும் உடல்வழியே
தீயைக்கக்குகிற எரிச்சல் பாதை திறந்தபோது
நான் பள்ளத்தாக்குகளில் இறங்கியும் மலைகளில் ஏறியும்
அதற்கு அப்பாலும் சென்று
தமயந்தி வடிவிலான கண்ணாடிக்குவளையில்
எனது உலகை ஒரு புள்ளியாகக் காணத் தொடங்குகிறேன்
தமயந்தி கசப்பான மதுவையும் ஒரு முழு இரவையும்
என்னுடன் பகிர்ந்துவிட்டு களிப்பில் சிதறிக்கிடக்கிறாள்.
No comments: