- அனார்
என்னுடைய களஞ்சியங்களிலிருந்து
முதலில் எனக்கே எல்லாம்
மலைப் பொந்திலிருந்து கசியும் ஈரம்
திமிறும் குமுழிகள்
என்மீது நிரம்பி ஓடின
நீர்வீழ்ச்சிகளின் ஆர்ப்பரிப்பை நிகழ்த்தும் ஓவியத்தில்
மீன்கள் இரைகளை உண்ணுகின்றன
பூவரசம் பூக்கள் மிதந்து மிதந்து செல்கின்றன
ஒவ்வொரு புதிய கணங்களை
ஒவ்வொரு புதிய புன்னகைகளை
ஒவ்வொரு புது வானத்திலும்
ஒவ்வொரு பறவைகளாக்கிப் பறக்கவிடுகின்றேன்
என்னுடைய ஆனந்தத்தை
ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகின்றேன்
எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறேன்
எனது ருசியின் முழுமையை
முழுமையின் ருசிக்குப் பரிமாறுகின்றேன்
எனக்கு மேலும் பசித்தது
என்னைக் கலைத்துப் போட்டு
உண்ணத் தொடங்கினேன்
காட்சி அறையிலிருந்து தப்பிவந்த நீர்ச்சிலை
Reviewed by மறுபாதி
on
9:03 AM
Rating:
No comments: