$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பெருங்கோயிற் சிதைந்த சிற்பத்தின் வரைபடம்

சித்தாந்தன்

ஒளிக்குப் புறம்பாக

கட்டிமுடிக்கப்பட்ட மண்டபத்தை

சாத்திக் கொண்டிருக்கிறான்

இரவின் சூத்திரதாரி

மண்ணகழ்ந்து வெளியயடுத்த

பெருங்கோயிற் சிதைந்த சிற்பம்

அதன் மூலையில்

சிதிலங்களாக குவிக்கப்பட்டிருக்கிறது

முரண்கள் விருட்­ங்களாய்

கிளை விரிக்கையில்

மண்டபச் சுவர்களில் மோதிக்

கலைகின்றன புறாக்கள்

மாமிசம் நாறும் வெளியில்

விக்கிரப் புனைவு விதிகளை

கட்டவிழ்க்கிறான் சிற்பி

எல்லாச் சிலைகளிலும்

மிருகங்கள் விழித்துக் கிடக்கின்றன

மந்திரங்களால் ஆக்கப்பட்ட

பெருங்கோயில்

புதையுண்ட காலச்சரிவில்

நிரைநிரையாக முளைக்கின்றன

புத்தம் புதிய விக்கிரகங்கள்

பாதி விழி மூடிய விக்கிரகங்களில்

சாவைச் சூடிய மகா வாக்கியங்கள்

எல்லாக் கதவுகளையும்

சாத்திவிடுங்கள்

புலன்மேய வந்திருக்கிறது

கற்களாலாய காலம்

பெருங்கோயில்

புதையுண்ட மணற்தரையில்

ஓயாப் பெருங்குரலில்

யாரோ கதறியழுகிறார்கள்

நிர்க்கதியாக்கப்பட்ட

கடைசி மனிதனின் குரலாக அதிருக்கலாம்.

பெருங்கோயிற் சிதைந்த சிற்பத்தின் வரைபடம் பெருங்கோயிற்  சிதைந்த சிற்பத்தின் வரைபடம் Reviewed by மறுபாதி on 9:12 AM Rating: 5

No comments:

Powered by Blogger.