
நடு நிசிகளில்
பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன
அவைகளின் விழிகளுள் படர்கின்றன
உதிர்ந்து கிடக்கும் மிரட்டும் விழிகள்
பொம்மைகள் சிரித்துப் பேசும்
மனநிலையில் இருப்பதில்லை
மிரட்டும் விழிகள்
ஆணியடிக்கின்றன அதன் அடி மனதில்
எப்போதும் அறையின்
ஏதாவதொரு மூலையில்
மெளனமாய் முகத்தில் சோகம் நிரம்ப
அம்மணமாக சிலவேளை உறங்குகின்றன
அல்லது விழித்திருக்கின்றன.
பொம்மைகள் விழித்திருக்கும் போதும்
அல்லது உறங்கும் போதும்
அவற்றின் விழிகள் கொடூரமான மிருகமொன்றினதாகவோ
கொடூரமான மனிதனொருவனுடையதாகவோ
தம் அடையாளம் காட்டுகின்றன.
அறையின் மத்தியில்
உதிர்ந்து கிடக்கும் விழிகள்
நினைவில் வரும் போதெல்லாம்
பொம்மைகள்
தமது முகங்களை கண்ணாடியில் பார்ப்பதற்கு
அச்சப்படுகின்றன அல்லது வெறுக்கின்றன.
நடுநிசிப் பொம்மைகள்
Reviewed by மறுபாதி
on
9:18 AM
Rating:

No comments: