$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பா. அகிலன் கவிதைகள்

பேராடை

அதை நான் நீக்க முடியாது

காரிருளிலும் கரிய

முடிவடையாது

குகைபோலத் நீண்டு திரண்ட

இந்தப் பேராடையை

தீயாலும் வலியாலும் பின்னப்பட்ட

காலங்களின் பேரடுக்கினை

நினைவுகள் உக்கியும்

முளைத்துமூரும்

இந்தப் பாசித்துளையை

நீக்க முடியாதென்னால்

தலைமுறைகளின்

விதிரேகைகள் ஓடிப் புடைத்த

இந்தத் தணலாடையை

சீழும் இரத்தமும்

உறைந்து படிந்து, கிழிந்த

இந்த ஓலச்சட்டையை

யாரும் பூணத்தயங்கும்

நூற்றாண்டுகளின் முள்ளங்கியை

கண்ணீராலான இந்த நீருடலை

நீங்க முடியுமா என்ன?

வேர் விட்டோடி

தேகத்தின் மேற் பிணைந்த இன்னொரு தேகத்தை

காயங்களின் பெருங்குடலையை

தேகத்தைத் துளைத்து

உயிர்மேட்டில் ஒட்டிக்கிடக்கும் இந்தப் பேராடையை

உலகத்தாற் தள்ளி தாளிடப்படும் தீட்டுச் சட்டையை

நீக்க முடியுமாயின்

என்னையும் நான் நீங்கிச்சென்று மறைவேன்.

பெருநிலம்:

மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்

பூண்டும், புராணிகமும்

நீரும், இல்லும் சேர்த்துப் பொத்தப்பட்ட

பெரு நகரத்திற்குக் கீழே

பகலிரா ஓயா

தெருக்களும், கிளைகளும் மொய்துப் பரவி

சனங்கள் நெரிந்து

வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு இன்னும் கீழே

படி பிடித்து

கீழிறங்கிப் போனால்

சாம்பரால் ஆன வெம்மையடங்காகவொரு புயற்பரப்பு

நீங்கி

மேல்நடந்து, கீழிறங்கிப் போனால்

அழுகையும், கதறலும் பரவியயாட்டிய ஒலியடுக்கு

அதற்கும் கீழே

முடிவடையாத குருதியால் ஒரு திரவப் படுக்கை

அதற்குக் கீழே

கெட்டிபட்டு முன்னடர்ந்து மண்டிய நினைவடுக்கு

அதற்குக் கீழே

மரங்களின் வேர்களும் முட்டாதவொரு பெரும் மெளனப் பரப்பு

நீங்கி இன்னும் மேல் நடந்து

கீழிறங்கினால்

ஒரு முதிய பெண்

காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு துறவிப் பெண்
பா. அகிலன் கவிதைகள் பா. அகிலன் கவிதைகள் Reviewed by மறுபாதி on 9:29 AM Rating: 5

No comments:

Powered by Blogger.