$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

ந.சத்தியபாலன் கவிதைகள்

எழுதாத மடலொன்றின் கதை...

விளக்கில் துடித்தபடியிருக்கிறது சுடர்

எதுவென அறியாது

எதிர்ப்படும் கணமொவ்வொன்றையும்

ஐயுற்று அல்லாடுகிறது அது.

ஏற்றிப் போனவளின் வேண்டுதல்களில் துடிக்கின்ற தவிப்பு

வலிதாங்கி வாழச் சொல்கிறது சுடரை

தீர்ந்து போய்க்கொண்டிருக்கின்ற நெய்யை

நிதானமாய் உறிஞ்சி தன்தவம் தொடர்கிறது திரி

எல்லாவற்றையும் ஏந்தித்தாங்கும் விளக்குத்தண்டின்

இதயம் படபடக்கிறது.

மெல்லொளி அச்சூழலின் இயல்பெனப் பரவி நிறைகிறது

அறையில் நிரம்பித் திணறும் வேண்டுதல்கள்

சுவரிலும் கதவிலும் யன்னலிலும் மோதித் திரும்புகின்றன.

காற்றிடம் சமர்ப்பிக்க விரும்பும் தமது கோரிக்கையை

எழுதும் மொழி தெரியாமல் வகை புரியாமல் திணறுகின்றன

சுடரும் திரியும்.

உருண்டு கரைந்தபடியிருக்கின்றன கணங்கள்.

0

ஒரு கறுப்பு நாளின் ஜனனம்

வலியன உனதரண்கள்

வாயிலில் மீற இயலாதுள்ளது காவல்

அதிசயமாய் நிகழும் உன் வருகை

உரையாடல் தொடங்குகிறது

அதன் நகர்வில் தெளிவாகிறது

ஒரு விடயம்.

இருதரப்புக்களிடையில்தான்

எனினும்

ஒரு தரப்பில் தனியே காதுகளும்

மறுதரப்பில் நாவுகளுமாய்

நிகழுமொரு அதிசயம்!

நாவுகளின் தரப்பு

அறிவிக்கும் பிரகடனங்களை

அந்நியமான மொழியயான்றில்

எழுதப்படுகிறதொரு தீர்ப்பு

முகங்களிலெறியப்பட்ட

கல்லுகளின் மூடைகனக்கிறது

இசையயதுவும் மீட்டப்படாமலே

உடைந்து போகிறது வாத்தியம்

தலைகுப்புற வீழ்ந்து

இருட்டில் மூழ்கிப் போகிறதொரு

காலை!

ந.சத்தியபாலன் கவிதைகள் ந.சத்தியபாலன் கவிதைகள் Reviewed by மறுபாதி on 9:18 AM Rating: 5

No comments:

Powered by Blogger.