$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

சுவிஷேசங்கள்

பா.அகிலன்

“குற்றம் புரிவதில் தாகமுடையவனாக உள்ளேன்”
-ஜீன் ஜெனே

சுவிஷேசம் - 1

போக்கிரிகளில் கடைகெட்டவனும்
புனித இடங்களை
அழுக்காக்கும் மலவானும்
விதிவசத்தால் தொடநேர்ந்தால்
உயிர் முனையில் குத்திக் கொள்ளும் விஷவானும்
நற்குறிகளை அழிக்கவல்ல கொடூரனும்
காமாந்தகனுமாகிய
அவனிவன் உவன் எனப்படும்
இவனவன் உவனுக்கு
வெளிப்படுத்தப்பட்ட சுவிஷேசம்

இருளே சீழே
எச்சிற் பாண்டமே
பொய்யே மெய்
மெய்யே பொய்
மெய்யைக் கடந்தான் பொய்யைக் கடந்தான்
பொய்யைக் கடந்தான் மெய்யைக் கடந்தான்
மெய்யைப் பொய்யைக் கடந்தான்
பூமியைக் கடந்தான் காண்


சுவிஷேசம் - 2

தீரா மதுமாந்தியும்
மாமிச வாடையால் உசுப்பப் பெறுபவனும்
தேகம் முழுவதும் குறி திறந்தவனும்
பச்சோந்தியும்
அன்பு காய்ந்தவனுமாகிய
அவன் எனப்படும் இவனுக்கும்
இவன் எனப்படும் அவனுக்கும்
இவனவனெனப்படும் அவனிவனுக்கும்
வெளிப்படுத்தப்பட்ட சுவிஷேசம்

அழுக்கே
மலவாயே
தேகமொரு படகு
படகோட்டி பாக்கியவான்
நீர் கடந்து நீர் கடந்து
நீர் திறந்து
கரை திறந்து
அவனே வெளியேறிச் செல்கிறான்

சுவிஷேசம் - 3

சுயகைமனத்துள் சுருண்டவனும்
மலங்களை மெல்லுபவனும்
சிறுநீர்த் தொட்டிகளில் உறங்குபவனும்
பிண இலையானுமாகிய
அது எனப்படும் அவனுக்கும்
இது எனப்படும் இவனுக்கும்
அதுவிது எனப்படும் அவனிவனுக்கும்
வெளிப்படுத்தப்பட்ட சுவிஷேசம்

புழுவே பூச்சியே
தீட்டுச் சேலையே
தூங்காதவன் பாக்கியவான்
அவனே பார்க்கிறான்
அவனே கேட்கிறான்
பாதை கடந்து பாதை கடந்து
அவனே
பாதையாக்கிச் செல்கிறான்

2008
சுவிஷேசங்கள் சுவிஷேசங்கள் Reviewed by மறுபாதி on 9:55 AM Rating: 5

No comments:

Powered by Blogger.