இணை பிரிந்த புறாவின் மெல்லிய முனகல்
தானா விஷ்ணு
“புதிய இலைகளால் ஆதல்” என்ற தலைப்பு பசுமையான வாழ்வினை வேண்டி நிற்கும் பெண்ணின் குறியீடாக அமைகின்றது. அந்த இலைகள், அவரின் கனவுகளாலும், மகிழ்ச்சிக ளாலும் நிறைந்து போயிருக்கின்றன. இந்த எதிர்பார்ப்பு மலரா போன்று அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
பெண் கவிஞர்கள் பொதுவாக ஒரு பெண்ணிய முயற்சியாளர்களாக அல்லது ஆணா திக்க எதிர்பாளர்களாக ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது கருத்தினை அல்லது எண்ணத்தினை மிக இலாவகமாக எல்லோரும் விளங்கிக் கொள்ளக் கூடியவகையில் கவிதைகளாக்குகின்றனர். ஆனால் மலரா சற்று வேறுபட்டு எதிர்ப்புக் குரலைக் காட்டுவதோடு எதிர்பார்ப்புகளுடன் கூடிய துணை வேண்டி நிற்பவராகவே வெளிப்படுகின்றார். ஏனைய பெண் கவிஞர்களைப் போல நேரடியான பொருட்புலப்பாட்டோடே தனது கவிதைகளையும் இவர் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
“புதிய இலைகளால் ஆதல்” கவிதைத் தொகுதியில் நாற்பத்தெட்டுக் கவிதைகள் உள் ளன. இவரது எல்லாக் கவிதைகளும் வெளிப்பாட்டு முறைகளில் ஒரே வகை சார்ந்தவை. ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை கொண்டவை. பிற பெண் கவிஞர்கள் போல ஆண் களின் மீது கோபத்தை நேரடியாக கவிய வைக்காது தனது பிரியத்தின் மூலமாக, தன்னால் கொடுக்க முடிந்த அரவணைப்பின் மூலமாக எல்லா வகைக் கேள்விகளையும் எழுப்ப முனைந்திருக்கின்றார். இங்கு கேள்விகள் என்றால் உண்மையில் கேள்விகளேயல்ல, தன் துணை மீது மோதவிடக்கூடிய அல்லது துணைக்கு கொடுக்க முடிந்த எல்லாப் பிரியத்தையும் தனக்கும் துணைக்குமிடையே காணப்படும் வெறுமையயங்கும் உலாவவிட்டு அவற்றின் மூலமான பதிலீட்டுப் பிரியத்தை பெறமுயற்சிப்பதே அவருடைய பெறுமானமாகக் காணமுடி கின்றது. இதில் வெற்றி கண்டாரா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை. உள்ளாமாறுதல்களை ஏற்படுத்த முடியுமா? என் பதே அவருடைய பிரச்சனையாகவுள்ளது.
பெண்களுக்கான பிரிவுத்துயரையும், வலியையும் மிக நுணுக்கமான முறைகளில் மலரா தனது கவிதைகளில் வெளிப்படுத்தி யுள்ளார். பொதுவாகப் பெண் கவிஞர்கள் ஆணாதிக்க சமூகத்தின் மீது வீசும் சாட்டை களையும், தம்மீது வீசப்பட்ட சாட்டைகளின் தழும்புகளையும் எடுத்துக் கூறும் கருவியா கவே தமது கவிதைகளைப் பயன்படுத்தியுள் ளனர். ஆனால் மலராவின் கவிதைகளில் சாட்டையடிகளையோ, அதன் தழும்பு களையோ காணமுடியவில்லை. மாறாக எதிர்பார்ப்புத்துயர், பிரிவுத்துயர், இயலாமை போன்றவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாட் டையே அவதானிக்க முடிகின்றது.
“கொச்சிக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காக காத்திருக்கும்
தனிமை எனது.”
இவை அனாருடைய கவிதை ஒன்றின் வரி கள். பிரிவுத் துயரின் வலிகளையும் வாழ்க் கையில் எப்போதும் நிகழச் சாத்தியமான முரண்பாடுகளையும், அதனால் ஏற்படும் இடைவெளிகளையும் இக்கவிதை புலப்படு கின்றபோதும் ஆணை முதன்மைப்படுத்தி அவனுக்காக ஏங்கும் இயலாமையையும் இக்கவிதையில் உணர முடிகிறது.ஆனால் மலரா தனது கவிதையயான்றில்
“தூரமாகிவிட்ட வாழ்க்கை நீ
வருகின்ற நாளினை
எண்ணி எண்ணி மாய்கிறேன்
சில
மணித்தியால நிறைதலில்
உன் அணைப்பில்
என் உயிர்
கசங்குவதை நினைத்தல்ல
உன்னை விட்டு நீங்கும்
வெறுமை படர்ந்த
கடைசிக் கணங்களை
நினைத்துக் கொண்டு”
என தனது பிரிவுத்துயரையும் அது தரும் மன வலியையும் கவிதையாக்குவதில் மிக நிதா னமாகச் செயற்படுகின்றார்.ஆனால் ஆணா திக்க அரசியலில் வாழ்வினைச் சீரழித்து ஒளிரமுடியாமல் மங்கிப்போன பெண்களின் குரலாய், குறியீடாய் மலரா தனது கவிதை களை நிலை நிறுத்தியதாகத் தெரியவில்லை. அவரது கவிதைகளெங்கும் சோகங்களே படிந்து போயுள்ளன.வாழ்வின்வெறுமையை யும், அந்த வெறுமையயங்கும் சுற்றி வட்டமிட் டுக் கொண்டிருக்கும் துயர்களையும் கவிதை யாக்குவதில் கவனம் கொண்டுள்ளார். இந்த வாழ்வின் வெறுமையுணர்வென்பது பிரிவுத் துயரால் நேர்ந்ததொன்றாகவே இவரது பல கவிதைகளிலிருந்தும் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.
அதே வேளை ஆணும் பெண்ணும் சமம் என்ற பார்வை அவரிடம் உள்ளது அதனை அவருடைய “நகர்தல்” என்ற கவி தையின்
“அர்த்த நாரீஸ்வரத்தின்
அரைப்பாதிப் புலன்களை
தனக்குள்
புதைத்துக் கொண்டு
பாதிப் பெண்ணாய்
யதார்த்த நெடுஞ்சாலையில்
கால்களை வீசியபடி”
இவ்வரிகளுக்கூடாக வெளிப்படுவது குறிப் பிடத்தக்கது. இவரது கவிதைகள் போர் நாட் களில் நிகழ்ந்த மரணங்களையும், அவலங் களையும் ஓரளவிற்கே சித்தரிக்கின்றன. “நீ காற்றாய், மழையாய்....” என்ற கவிதை இத் தகையதே. ஆனால் அதுவும் கூட பிரி வென்ற ஒரு பெருவெளியையே சுட்ட முனைந்துள்ளது. இது மீள மீள ஒரே வட்டத் துக்குள்ளேயே சுற்றி அவர் வெளிவர முடியா மல் தவிப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக
“தேடுகிறேன்
வானப் பெருவெளியில்
எனக்குப் பிடித்த
ஒற்றை விண்மீனுக்குப் பக்கத்திலாவது
இருக்க மாட்டாயா?”
என்ற வரிகளைச் சுட்டலாம். இவ்வரிகள் பிரி வுத் துயரினால் விளையும் ஏக்கப் பெருமூச் சாக வருகின்றன. பெருமளவாக இல்லை யயன்றாலும் பெண்ணியக் கருத்துக்களை வெளிக்கொணரும் கவிதைகளாக “பலி பீடம்” “காற்றில் விடு” என்பவற்றினைக் குறிப்பிடலாம்.
“அம்மா
எனக்குத் தொட்டில் வேண்டாம்
தொட்டில் சட்டங்கள் என்னைக்
குறுக்கப் பார்க்கின்றன.”
என “காற்றில் விடு” என்னும் கவிதையில் அடக்குமுறைக்கு எதிராக குரலை வெளிப் படுத்த முனைகின்றார். இருந்தாலும் இயல் பாக சிறகு விரித்து தனியாகப் பறப்பதற்கு முடியாமல் அடங்கிக் குறுகிப் போகும் இய லாமை இவரது கவிதைகலெங்கும் வெளிப் படுவது ஒருவகையில் இவரின் கவிதைக ளின் தோல்வியாகவே கருதலாம்.
பல்லவர் காலத்தில் விஷ்ணு மீது ஆண் டாள் கொண்ட அளவில்லாப் பிரியம் ஆண் டாளை பாசுரம் எழுதத் தூண்டியது. எப்போ துமே தீராக்காதலும், காமமும் வெளிப்படும் கவிதைகள் ஆண்டாளினுடையது. ஆண் டாள் விஷ்ணுவினுடைய பொருட்களையா வது தான் தொட்டுணர வேண்டுமென்ற ஏக் கத்தைப் பாடியதுபோல் மலரா
“சேர்த்து வைத்துள்ளேன்
உன் சப்பாத்திலிருந்து உதிர்ந்து விழுந்த
ஒரு சிட்டிகையளவு மண்ணை....
உடல் துவட்டி
சுருட்டிப் போட்ட துவாலையை
தலைசீவி சிக்குண்டிருந்த
உன் ஒரு சில மயிரிழைகளை
படுத்துறங்கிய
பூப்போட்ட தலையணையில்
பதிந்துபோன உன் வாசனையை”
எனப் பிரிவின் பின்னாலான மனத்துயரை மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார்.
எதனை எப்படிச் சொன்னாலும் மலராவி னுடைய கவிதைகள் பிரிவுத் துயரின் வெளிப் பாடுகளாக அமைவதனை அவராலேயே தடுக்க முடியவில்லை. அதே நேரம் பெண்க ளுக்கென வரையறுத்து வைக்கப்பட்ட மர பைப் பிற கவிஞர்கள் மீறியதனைப்போன்று இவரால் மீற முடியவில்லை. சமுதாய வெளி யைத் தாண்டிப் பறக்க முனைந்தும் மலரா பறக்க முடியாதவராய்த் தோற்றுப்போய்த் திரும்பிவிடுகிறார்.
No comments: