சடாகோபன்
சின்ன வயதிலே
அவர் என்றால்
அப்படியயாரு பயமெனக்கு
அவருக்கும் எனக்குமான
முதல் சந்திப்பும் கூட
ஒரு பயங்கரமான நிகழ்வுதான்
பந்தடித்து
விளையாடிக் கொண்டிருந்த போது
மண்ணுக்குள் புதைந்து கிடந்த
அவரின் உக்கிய துண்டு ஒன்று
அண்ணையின் காலைக்கிழித்து
இரத்தம் ஓடிய நினைவு
இப்போதும் நெஞ்சுக்குள் இருக்கிறது.
பிறகு ஒருமுறை
அவரை நான்
எங்கள் தோட்டத்து வேலியில்
பீர்க்கங்காய் பிடுங்கும் போது
சந்தித்திருக்கிறேன்.
சின்ன விரலில்
சின்னதாய்க் கீறிவிட்டு
சரி...போ...என்று விட்டுவிட்டார்
சோற்றால் ஒட்டி
அம்மம்மாவின்
பழைய சேலையில் கிழித்து
வால் கட்டி
நான் விட்ட முதற்பட்டம்
காணி எல்லையில்
நித்திரையாய்க் கிடந்த
அவரின் மேனியில் விழ
கோபப்பட்டு
வர்ணக்கடதாசியைக் கிழித்த போது
எனக்கு
வானமே கிழிந்தது
பந்தடி பார்த்து
பந்து பொறுக்கி
பின்னர்
நானே பந்தடிக்கின்றபோதுதான்
புரிந்துகொண்டேன்
எனது முதுகை
அவர் கிழிப்பது
எவ்வளவு முக்கியமானதென்று
அவனாய்...!
அவளாய்...!
அதுவாய்...!
எதுவாயோ எல்லாம்
அவரைப் பார்த்துப்
பட்ட அறிவு
எப்போதும் எனக்கு
பாதையாய் விரிகின்றது
இன்று
முள்ளுக்கம்பியவரின் நிழல் கோடுகள்
எங்கள் முகங்களில் விழுகின்றன...!
தழும்புகள் ஆகாமல்
தடுப்பது யார்...?
No comments: