மிகச் சில நிகழ்வுகளிலும்கூட அரூபமாயயனை
எதிரீடு செய்யும் கிளைத்து நீண்ட
கோரநகங்கள் சூடிய பெயரறியாச் சில ஊணுண்ணிகள்
வென்றுவிட வேண்டுமே யயன்ற பதகளிப்போடு
வெளியிலே என்றைக்குமே ஓயாத ஆட்டந்தான் அவைகளோடு.
ஒவ்வோர் தடவையும் அவைகளே வென்றுவென்று
மிக அகங்காரமாய்த் தம் துர்க்கரங்களை
உயர்த்தி எம்பியபடியே கூக்குரலிட
நானோ எப்போதுமே துவண்டு வீழ்வேன் களத்திலேயே.
நிலம் புதைந்த நீர்க்குழாய்ப் பின்னலிலே
எங்கோ ஓர் சிறு வெடிப்பு அரூபமாகவே
நானறியாமலே நீர் பொசிந்து
மண்ணுறிஞ்சிட, உச்சத்திலே இருத்திய
நிறை கொள்கலனோ காலியாகிற்று
சப்தமின்றியே.
நான் சாய்ந்து விடக்கூடாதென்றா
சட்டென உள்ளிழுத்துக் கொண்டாயுன் தோள்களை.
என்றைக்கும் போலவே
என் தொழுகைப்பாய் மட்டுமே
அளவீடு செய்திற்றென் கண்ணீரின் உப்புச்செறிவை.
நீ மட்டுமேன் மெளனமாகவே இருக்கிறாய்?
புலனறியா நிலமிருந்துங் கூட எனைப் பொசுக்கும்
முரண்கள் நெருக்கீடுகள் போலவே
நீயுங்கூட அரூபமானவன் என்பதனாலா?
No comments: