தீபச்செல்வன்
தன் இரண்டாவது கணவனையும்
இழந்த சகோதரி
இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லியனுப்பியிருக்கிறாள்
பதிலற்று கரைந்து கொண்டிருக்கின்றன
என் வார்த்தைகள்
நொந்துபோன குரல்களால்
தன் காட்சிகளை அவள் கோரிக்கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் அவளுக்கு
முன்னால் விளையாடித் திரிந்துகொண்டிருந்த
தன் குழந்தைகளைத் தேடுகிறாள்.
அழிக்கப்பட்ட காட்சிகள்
ஆன்மாவை நிறைத்துக் கொண்டிருக்கின்றன
எல்லாக் கண்களையும் இழந்து போயிருக்கிறேன்
என்பதைத் திரும்பத் திரும்ப சொல்கிறாள்
கண்களைப் பிடுங்கிச் சென்ற யல்
அவளது இரண்டு குழந்தைகளையும் விழுத்திச் சென்றது.
கண்களற்று துடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான்
அவள் மாபெரும் சனங்கள்
கண்களை இழந்த
மைதானத்திலிருந்து அகற்றப்பட்டாள்
கண்கள் தொலைந்து போனது
குழந்தைகளையும் கண்களையும் அவள் தேடிக்கொண்டிருந்தாள்
சிதறிய குழந்தைகளின் குருதி
காயமடைந்த அவளின் கண்கள் இருந்த இடத்தையும் நனைத்தன.
குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருந்தாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்.
கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் யல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகின்றாள்.
No comments: