தமிழில்- ரிஷான் ஷெரிப்
நீங்கள் நினைப்பது
அவர்களை இருண்ட சுரங்கமொன்றினுள்
குரூர வதைகொடுத்துச் சிறைப்படுத்த வேண்டுமென்றா
அவ்வாறெனில்
முள்வேலியடித்து
முகாமொன்றினுள் அடைக்கப்பட்டவர்கள்
சுதந்திரமாக வாழ்வதாக
நீங்கள் உரைக்கக் கூடும்
நீங்கள் நினைப்பது
அவர்கள் அச்சம் நாணம் அற்ற
நிர்வாண காட்டுமிராண்டிகளென்றா
அவ்வாறெனில்
பங்கிட்டுக் கொடுத்த
கந்தல்த் துணியைச்
சுற்றிக் கொண்டதன் பின்னர்
அவர்களிடம் பட்டாடைகள் உண்டென்று
நீங்கள் உரைக்கக் கூடும்
நீங்கள் நினைப்பது
அவர்கள் இடத்துக்கிடம் வீழ்ந்து
பட்டினியால் செத்துப்போக வேண்டுமென்றா
அவ்வாறெனில்
அதிகாலை மூன்றுமணிக்கு
வரிசையில்
பங்கிட்டுக்கொடுக்கும் கொஞ்சத் தண்ணீரை
அமிர்தம் போன்றதென்று
நீங்கள் உரைக்கக் கூடும்
நீங்கள் நினைப்பது
அவர்கள் கொள்ளை நோயினால்
அழிந்தொழிந்து போகவேண்டுமென்றா
அவ்வாறெனில்
தொண்டரான வைத்தியரொருவரின்
மருந்து வில்லையயான்றை
தேவஔதம் என்று
நீங்கள் உரைக்கக் கூடும்
நீங்கள் நினைப்பது
அவர்களுக்குரிய ஒரே விதி
வாழ்வல்ல மரணம்மென்றா
அவ்வாறெனில்
இறந்தவர்களிடையே எஞ்சிய
மனிதனொருவனின் சுவாசத்தை
வாழ்தல் என்று
நீங்கள் உரைக்கக் கூடும்
நீங்கள் நினைப்பது
அவர்கள் நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து மிதிபட்டுப்
பயந்தாங்கொள்ளிகளாக இருக்க வேண்டுமென்றா
அவ்வாறெனில்
பார்த்த திக்கையே பார்த்தவாறிருக்கும்
இந்த அமைதியான மனிதர்களை
சகோதர மக்கள் என்று
அப்போது நீங்கள் உரைக்கக் கூடும்.
No comments: