$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

விநோதினி கவிதைகள்

ஒரு வீடு

காலம் யாருக்குங் காத்திராது நழுவுகிறது

நாற்றிசைப் பாதைகளில்

எதிர்ப்படும் மாந்தரில் எவரும்

அறிந்தவராயில்லை.

பயணங்களில்

கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்

முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.

விரையும் வாகனத்தினூடு தென்படும்

ஊரோரக் குடில்

கையசைக்கும் சிறுமி

யாரோ கைவிட்ட ஒரு வீடு

வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம்

சூரியகாந்திப் பூக்கள்

சிறுபழக்கடை என எல்லாமே

எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும்

அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும்

ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

சந்தித்தல்

சந்திப்பதற்கென

ஒரு நாளின் மாலையைத் தேர்ந்தேன்

கொஞ்சம் கவிதைகள்

கனிவூட்டும் இன்னிசை

காதலின் சுவை கலந்த தேநீர்

வாசனை தந்து வரவேற்க மலர்கள்

எல்லாம் ஆயத்தமாக

அழகிய மாலைகளும்

கடிகாரமும் யாருக்காயுங் காத்திருப்பதில்லை

மஞ்சள் மாலை மெதுவாகக் கறுக்க

மணலில் பரவும் நீரெனப் பரந்தது இரவு

நிகழாதுபோன வருகையும்

பகிரப்படாத கவிதைகளும்

சொல்லப்படாத காதலும்

பருகப்படாத தேநீரும் வாடும் பூக்களோடு

ஒவ்வொரு அழகிய மாலையிலும்

எங்கோ ஒரு வீட்டின்

தோட்டத்தில் கைவிடப்படுகின்றன

விநோதினி கவிதைகள் விநோதினி கவிதைகள் Reviewed by மறுபாதி on 9:02 AM Rating: 5

No comments:

Powered by Blogger.