$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

எஸ்போஸ் கவிதைகள்

இன்னும் சேகரிக்கப்படாத புறாவின் சிறகுகளும்

தெருவின் நிழலில் கரையும் நாங்களும்

வாழ்வின் எல்லா இழைகளையும் அறுத்துத்

தெருவில் இறக்கிவிட்டது காலம்:

முழுஇரவையும் ஒரு புள்ளியாக்கி

முகத்தில் அறைந்துபோயிற்றுப் புயலாய்.

எனதன்பே

காலத்தின் குரூரப் பற்களிடையிருந்து

உனது இதயத்தைக் காத்துக்கொள்ள உனக்கிருக்கும்

தருணத்தைக் கொண்டு

நீ போய்விடு.

இருளின் புள்ளியில் முடிவற்றுச் சுழலும் எனது வாழ்வின்

நிழலில்

நட்சத்திரச் சிறுதுண்டாயினும்

பட்டொளிர முடியாதிருப்பதாகவும்

என் மனமிடை படர்ந்த துயரின் வேர்களில்

ஒருபுள்ளி நீர்தானும் விட்டகல முடியாதிருப்பதாயும்

நீ வருத்தமுறக்கூடும்

அல்லது நான் அவ்வாறு நினைக்கிறேன்

எனக்கு நம்பிக்கையிருக்கிறது:

காலத்தின் முன்னே வலுவிழந்து கிடக்கும் எனது

விரல்களை

ஒளிரும் ஒரு தீக்குச்சியைப்போல

நீ எப்போதாவது கண்டெடுப்பாய்:

தெருவின் அலைவிலும் பசித்துயரிலும்

இன்னும் எரிந்துவிடாதிருக்கும் அந்த நம்பிக்கையைக்

காத்தபடி

எனதன்பே

நீ போய்விடு

எனது கனவுகள் கதியற்றலையும் காடுகளையும்

இந்தத் தெருக்களையும் விடுத்து

யுக நெருப்பின் சாம்பலிடை கிடக்கும்

அந்தப் பறவையை நோக்கி.

சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே

எனது காதலியிடம் சொல்லுங்கள்

ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த

வனாந்தரத்திலிருந்து

ஒரு மிருகம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது

கடைசியாக நான் முத்தமிடவில்லை

அவளது கண்களின் வழமையாயிருக்கும்

ஒளியை நான் காணவில்லை

கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது

கடைசிவரை நட்சத்திரங்களையே

எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள்

எனது காலத்திலும் எனது காலமாயிருந்த

அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை

என்னை ஒரு மிருகம் இழுத்துச் சென்றுவிட்டது

நான்

இனிமேல்

எனது சித்திரவதைக் காலங்களை

அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது

எனவே தோழர்களே

நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது

மண்டையினுள் குருதிக்கசிவாலோ

இரத்தம் கக்கியோ

சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்திலும்

நான் செத்துப்போவேன் என்பது பற்றிச் சொல்லுங்கள்

நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை

நான் அவளுக்கு பரிசளிப்பது

இதுவே முதற்தடவை எனினும் அவளிடம் சொல்லுங்கள்

அவர்கள் எனது இதயத்தை நசுக்கிவிட்டார்கள்

மூளையை நசுக்கிவிட்டார்கள்

என்னால் காற்றை உணர முடியவில்லை.

6-04-2006 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலைசெய்யப்பட்ட கவிஞரும், பத்திரிகையாளரும், சஞ்சிகை ஆசிரியருமான எஸ்போஸ், போஸ்நிஹாலே என்ற பெயர்களால் அறியப்படும் சந்திரபோஸ் சுதாகரின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரின் இரண்டு கவிதைகளை மறுபாதி மீள்பிரசுரம் செய்கிறது. (கவிதைகளுக்காக நன்றி - கனவுகளின் அழுகை யொலி)

எஸ்போஸ் கவிதைகள் எஸ்போஸ் கவிதைகள் Reviewed by மறுபாதி on 9:42 AM Rating: 5

No comments:

Powered by Blogger.